26 August, 2011

எல்லோரும் இந்நாட்டு மன்னர்!

குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக கிடைக்கக்கூடிய அனைத்தையும் தேடுவதும்  துருவுவதும் எனது பழக்கம்.

யுத்தம் சம்பந்தமான படங்களை கடந்த பல வாரங்களாக பார்த்து வருகிறேன்.

எமது ஒரு தலைமுறை முழுமையாக யுத்தத்தில் ஈடுபட்டு அழிந்து விட்டது. எனினும் தமிழில் யுத்தம் சம்பந்தமான படங்களோ புத்தகங்களோ மிகவும் அரிது.

ஒருவேளை இதுவே அந்த நாசகார யுத்தத்துக்கு காரணமோ...? நவீன தமிழ் சமூகத்துக்கு (எங்களுக்கு) யுத்தம் புதிது.  அதில் ஒரு போதை இருந்தது போலப் படுகிறது.

மேலைத்தேய சமூகம் நவீனமயப்படுத்தப்பட்ட சமகாலத்திலேயே பாரிய யுத்தங்களையும் நடாத்தியது. அதன் விளைச்சல்களையும் விளைவுகளையும் எதிர்கொண்டது. விளைச்சல்களை முதலிட்டு பணமாக்கியது. விளைவுகளைப் படிப்பினையாக்கி கொண்டது.

WW II முடிந்து அறுபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகும், இக்கணம் வரை தொடர்ந்தும் யுத்தம் சம்பந்தமாக அவர்கள் எழுதியும் படமாக்கியும் வருகிறார்கள். அவை பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உடன்நிகழ்கால சரித்திரங்கள்.

எங்களுக்கு, சரித்திரம் என்பதன் தொனியே அரசர்களின் பள்ளிப்படைக் கோயில்களுக்குள்ளும் அந்தப்புரங்களுக்குள்ளும் புதைந்து போயிருக்கிறது. சிவகாமியின் முடிச்சிடாத கூந்தல் சிடுக்குகளுக்கும், பழுவேட்டரையரின் அறுபத்திநான்கு விழுப்புண்களில் மொய்க்கும் ஈக்களுக்கும் அப்பால் எமது வரலாறு போக மறுக்கிறது.

நவீன வரலாறு பற்றிய பிரக்ஞை எங்களிடம் இல்லை. வரலாறு என்பது அரசர்களினதும் ஆட்சியாளர்களினதும் கதைகள் அல்ல, மாறாக என்றுமே தோற்றுக்கொண்டிருக்கும் மக்களது ஓலங்கள் என்பது எமக்கு உறைப்பதே இல்லை.

எல்லா நவீனங்களையும் மேலைத்தேயங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நாம் இந்த விடயத்தில் கோட்டை விடுகிறோம். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து யுத்தம் சம்பந்தமான திரைப்படங்களை பார்த்ததில் ஒரு முக்கியமான விடயத்தை அவதானித்தேன்.

WW I இல் அல்லது அதற்கு முன்னர் நிகழ்ந்த மன்னர் கால யுத்தங்களை விட WW II இலும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிற யுத்தங்களில் கொடூரமான படுகொலைகளும் பழி வாங்கும் உணர்வும் மிக அதிகரித்துள்ளன. யுத்தங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளும் கட்டுப்பாடுகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

அதற்கு அரசியல்ரீதியான காரணமாக தேசியவாதத்தின் எழுச்சியையே என்னால் இனங்காண முடிகிறது. ஹிட்லர், ஸ்ராலின் ஆகிய இரண்டு மோசமான சர்வாதிகாரிகள் இதற்கு நல்ல உதாரணம்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கின்ற போலி அதிகார மாயையின் கவர்ச்சி மக்களிடம் ஏற்படுத்திய மிக மோசமான விளைவு இது.

இந்நாட்டு மன்னர்கள் எல்லோரது புலன்களையும் வன்முறையால் கட்டி அதன் கொடும் பயன்களினூடாக தனது நலன்களைப் பேணுகிறது உண்மையான அதிகார மையம்.